Monday, December 31, 2012

திருடன்: அத்தியாயம் 1: எதிர்பாரா விருந்து (Hobbit in Tamil)



திருடன்

[Disclaimer and முன்குறிப்பு : This is not my story. For you to figure out. அறிவியல் அறியப்படாத காலம்; பூமித்தாய் மிகக் கரடு முரடாக ஆனால் செம்மையாக இருந்த காலம்; சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், பூமியின் மத்திய பிரதேசத்தில் மனிதர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. அப்போது .... ]

ஒரு நில பொந்தில் ஓர் எல்லன் வாழ்ந்து வந்தான். பொந்துனா, சேரும் சகதியும், நீரும், புழுவும், பூச்சியும், நாற்றமும் நண்டுகளும் நிறைந்த அருவருக்கத்தக்க பொந்து இல்லீங்க. அதுக்காக, காய்ந்து உலர்ந்த, கல்லும் மணலும், கிடக்கும் உட்கார வசதி இல்லாத, அல்லது அமர்ந்து சாப்பிட முடியாத பொந்தும் இல்லீங்க: இது ஒரு எல்லன் குழி. அப்படீன்னா, வசதி மிக்க ஒரு சவுகரியமான வசிப்பிடம் என்று அர்த்தம்.

அதற்கு அழகான ஒரு வட்டக்கதவு இருந்தது. பச்சை நிற வண்ணம் பூசப்பட்ட அந்த கதவின் நடு புள்ளியில், பளீரிடும் மஞ்சள் நிற பித்தளை குமிழ் அல்லது கைப்பிடி காணப்பட்டது. அந்த கதவுக்குப்பின்னால், வரவேற்பறை குழாய் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. பார்பதற்கு துளைத்தெடுத்த சுரங்கப்பாதை போன்றிருந்தது; மிகவும் சௌகரியமான சுரங்கம்; புகை தூசி எதுவும் இல்லாமல்; அந்த குழாய் வடிவ அறையின் உட்புற சுவர்கள் மிக நேர்த்தியான மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்தன; தரை முழுதும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு, கால் மிதி கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது; மெருகு பூசி மினுக்கும் நாற்காலிகள் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. பிறகு ஏகப்பட்ட, ஏகப்பட்ட, பலப்பல மரக்கொக்கிகள் இருந்தன; தொப்பிகள் மற்றும் மேலங்கிகள் மாட்டுவதற்காக. இந்த எல்லனுக்கு விருந்தாளிகள் என்றால் மிகவும் பிரியம். இந்த சுரங்கப்பாதை(அல்லது வரவேற்பறை!) மேலும் மேலும் உள்ளே சென்றுகொண்டே இருந்தது; குன்றின் ஒரே பக்கவாட்டில் செல்லாமல், இடது வலது என இரு பக்கவாட்டிலும் வளைந்து பின்னி பாம்புபோல் அமைந்திருந்தது. குன்றின் இரு வெளிப்பக்கங்களிலும் மேலும் பல வட்டக்கதவுகள் திறந்தன; ஆமாம், இந்த சுற்றுவட்டாரத்தில் எல்லோரும் இதை மலைக்குன்று என்று தான் அழைத்தார்கள். நமது எல்லன் வீடு தான் உலகம்.

எல்லனுக்கு மேல் மாடி என்பதே கிடையாது; அல்லது எல்லர்களுக்கு படி ஏறுவது பிடிக்காது. படுக்கை அறைகள், குளியலறைகள், உணவுப்பொருட்கள் நிறைந்து கிடக்கும் உக்கிராண அறைகள்(ஏகப்பட்ட இவை), ஊக்கபானக்கிடங்குகள், துணி அலமாரிகள்(அதுவும் இந்த அலமாரிகள் ஒரு அறை முழுக்க நிறைந்திருந்தன), சமையலறைகள், உணவருந்தும் உண்டி அறைகள் இவை அனைத்தும் ஒரே அடுக்கில் காணப்பட்டன நம் எல்லன் குழியில்; அதுவும் இந்த அனைத்து அறைகளும் சுரங்கம் போன்ற பாதையின் இரு புறங்களிலும் அமைந்திருந்தன; இருக்கும் அறைகளிளிலேயே மிகச்சிறந்த அறைகள் பாதையின் இடப்பக்கம் இருந்தன. ஏனென்றால் இந்த அறைகளில் மட்டும் தான் ஜன்னல்கள் இருந்தன. வட்ட வடிவில் உள்வாங்கலாக பதிக்கப்பட்ட இந்த ஜன்னல்களிலிருந்து வெளியே உள்ள எல்லனின் தோட்டத்தையும், சரிந்து ஆற்றங்கரை வரை செல்லும் புல்மேடுகளையும் காண முடியும்.

இந்த எல்லன் மிகவும் வசதியானவர். இவருடைய பெயர் 'பாகின்ஸ்'. [இனிமேல் 'இவர்' என்று மரியாதையாகத்தான் அழைக்கபோகிறோம்] . பாகின்ஸ் என்பது இவர் குடும்பப்பெயர். பாகின்ஸ்கள், தலைமுறை தலைமுறையாக (எத்தனை தலைமுறை என்று யாருக்கும் தெரியாது), இந்த மலைக்குன்று பகுதியில் தான் வாழ்ந்து வருகிறார்கள். மக்களிடையே பாகின்ஸ்களுக்கு மிக்க மதிப்பும் மரியாதையும் இருந்தது. வசதி படைத்தவர்கள் என்பதற்காக மட்டும் அல்ல; பாகின்ஸ்கள் எந்த வித சாகசங்களிலும் ஈடுபடமாட்டார்கள்; அல்லது வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்ய மாட்டார்கள் என்பதற்காகவும் தான் இந்த மதிப்பும் மரியாதையும். ஒரு பாகின்ஸ், இன்னதொரு கேள்விக்கு என்ன பதில் சொல்வான் என்பதை அவனிடம் கேட்காமல் யார் வேண்டுமானாலும் சொல்லி விடலாம்.

இந்தக்கதையில், பாகின்ஸ் குடும்பத்தில் வந்த ஒரு எல்லன், எப்படி பிரமிப்பான சாகசங்களில் ஈடுபடப்போகிறான் என்பதையும், வழக்கத்திற்கு மாறான காரியங்களை செய்யப்போகிறான் என்பதையும், எதிர்பாராத விஷயங்கள் அவன் வாயிலிருந்து வரப்போகிறது என்பதையும் பார்க்கத்தானே போகிறீர்கள். இதனால், இவருடைய மரியாதை அக்கம்பக்கத்தில் குறையப்போகிறது என்றாலும், இவர் நிறைய லாபம் அடையப்போகிறார்; முடிவில் எதையாவது சம்பாதிக்கப்போகிராரா என்பதை நீங்களே பாருங்களேன்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த எல்லரின் அம்மா, (எல்லன் என்பது கொஞ்சம் மரியாதை குறைவாக இருக்கிறது, அதான்), .......... ஆமாம், எல்லன் என்றால் என்ன?

எல்லன் அறிமுகம்

இந்தக்காலத்தில், எல்லர்களுக்கு அறிமுகம் ஒன்று தேவைப்படுகிறது! என்ன செய்வது? எல்லர்கள் எண்ணிக்கையில் சொற்பமாகி, பார்பதற்கு அரிதாகி விட்டார்கள் இப்போது. மேலும் அவர்கள் உயர மனிதர்களிடம் அவ்வளவாகப்பழகுவதில்லை; உயர மனிதர்கள் என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்மை தான். எல்லர்கள் ருவில் மிகவும் சிறிய மனிதர்கள்; நம் உயரத்தில் பாதி உயரம் தான் அவர்கள் வளர்வார்கள்; உருவிலும் உயரத்திலும் தாடியுடன் கூடிய கற்குள்ளர்களை(dwarf) விட உயரம் குறைந்தவர்கள் இந்த எல்லர்கள். எல்லர்களுக்கு தாடி என்பதே கிடையாது; அவர்களிடம் மந்திர சக்தியும் கூட இல்லை; ஆனால் எல்லர்களுக்கே உரிய ஒரு குணம் உண்டு - உங்களையும், என்னையும் போன்ற, பெரிய உயர மனிதர்கள், மாங்கு மாங்கென்று நடந்து வந்தால், ஒரு மைல் தூரத்தில் வரும் யானையின் சத்தம் போல கேட்க்கும் இவர்களுக்கு. பிறகென்ன, நாம் வருவதற்கு முன், சத்தமில்லாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுவார்கள்.

இவர்கள், கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் உடை அணிவார்கள்(பெரும்பாலும் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில்); காலணி எதுவும் அணிய மாட்டார்கள்; ஏனென்றால், இயற்கையாகவே, அவர்கள் பாதத்தில் கடினமான தோல் வளரும்; அதே சமயத்தில், அடர்ந்த செம்பட்டை நிற முடியும் அவர்கள் பாதத்தில் வளரும். இவர்கள் தலை முடியும் இது மாதிரி தான் இருக்கும், சுருள் சுருளாக. சிவந்த நீளமான திறம்மிக்க விரல்களைக்கொண்டவர்கள். அழகான முகம்; கணீரென சிரிப்பு(உள் தொண்டையிலிருந்து; அதுவும், இரவு நேர உணவுக்குப்பிறகு சிரிப்பு அதிகம்; கிடைத்தால் ஒரே இரவில் ரண்டு தடவை சாப்பிடுவார்கள் தினமும்).

இப்போதைக்கு, இந்த அளவு அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். ஆங், நான் முன்னாடி சொல்லிக்கொண்டிருந்த மாதிரி, நம்ம எல்லர் 'பில்போ பாகின்ஸ்'ஓட அம்மா பேரு 'பெல்லடோனா டூக்'!!! (முடியல?!?). [மன்னிக்கவும், இந்த மாதிரி பெயர்களெல்லாம், அந்த பழங்கால புவி மத்தியப்பிரதேசத்தில் அப்போது வழக்கத்திலிருந்தது]. இந்த பெண் எல்லி (எல்லன் என்பதின் பெண்பால்) பெல்லடோனா டூக், பிரசித்திபெற்ற டூக் என்பவருக்கு பிறந்த மூன்று மிகச்சிறந்த பெண்களில் ஒருவர். நம் பில்போவின் மலைக்குன்றுக்கு அருகில் ஓடும் ஆற்றுக்கு பெயர் நீராறு. இந்த ஆற்றைத்தாண்டி வாழும் எல்லர்களுக்கெல்லாம் ஆஸ்தான தலைவராக இருந்தவர்தான் இந்த டூக் பெரியவர். (அதாவது, டூக், பில்போவின் தாத்தா). இந்த டூக் பரம்பரையில், பலகாலத்துக்கு முன், யாரோ ஒரு டூக், ஒரு குறும்பு தேவதையை கல்யாணம், செய்து கொண்டார் என்று ஊரில் உள்ள மற்ற குடும்பத்தினர் புரளி பேசிக்கொள்வார்கள். இது உண்மை இல்லை என்றாலும், இந்த புரளிக்கு ஒரு காரணம் உண்டு. அவ்வப்பொழுது, டூக் பரம்பரையில் வரும் யாராவது ஒருத்தர், திடீரென ஒருநாள் யாருக்கும் தெரியாமல் மறைந்து விடுவார்; சாகச பயணம் செல்ல. டூக் குடும்பத்தினர் இதை எப்படியாவது மூடி மறைத்து விடுவர். அதனால், செல்வந்தர்களான டூக் குடும்பத்தை விட பாகின்ஸ் குடும்பத்தினர்க்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம். இரு குடும்பத்தினரும் பெரும்பாலும் பணம் படைத்தவர்களாகவே இருந்தார்கள்.
எப்படி இருந்தாலும், எல்லி பெல்லடோனா டூக் இந்த மாதிரி எந்த சாகசத்திலும் ஈடுபடவில்லை; பங்கோ பாகின்சை கல்யாணம் கட்டிக்கொண்ட பிறகும் கூட. ! பங்கோ தான் நம் பில்போவோட அப்பா. இவர் தான் இந்த வசதி மிக்க எல்லன் குழியை தன் மனைவிக்காக கட்டினார்[பாதி பணம், மனைவியிடம் இருந்து வந்தது ;-)]. இவர்கள் தம் கடைசி காலம் வரை இங்கு தான் வாழ்தார்கள்.

பெல்லடோனாவின் மகன் பில்போ, பார்ப்பதற்கும், பழகுவதற்கும் தன் அப்பாவை அச்சு எடுத்த மாதிரி இருந்தாலும் (அதாவது, கம்பீரத்திலும், சௌகரிய பிரியத்திலும்) , ஏதோ ஒரு ரகசிய டூக் பரம்பரை குணம் அவரின் பவ்யத்தில் இருந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிவர காத்துக்கொண்டிருந்தது அது. பில்போ பாகின்ஸ் வளர்ந்து ஐம்பது வயதை தாண்டி விட்டாலும், அந்த சந்தர்ப்பம் வரவில்லை. பில்போ, தன் அப்பா கட்டிய இந்த எல்லன் குழியான மலைக்குன்றில் மிகவும் சௌகரியமாக வாழ்ந்து வந்தார்.

உலகம் அமைதி கொண்டு, பச்சை பசுமை மிகுந்து, எல்லர்கள் பல்கிப்பெருகி வசதியாக வாழ்ந்து வந்த அந்த காலத்தில், ஒரு நாள் காலை -- பில்போ பாகின்ஸ் காலை உணவருந்திவிட்டு தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். முடி அடர்ந்து வளர்ந்திருந்த பாதம் வரை நீண்டிருந்த நீளமான பெரிய அந்த மரக்குழாயில் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார்; அப்போது தான் காண்டாளர் வந்து சேர்ந்தார்.
காண்டாளர்! காண்டாளரைப் பற்றி எனக்குத் தெரிந்தது மிகவும் சொற்பம் தான். எனக்கு தெரிந்ததில் கால்வாசி உங்களுக்கு தெரிந்திருந்தால் கூட, உடனே ஒரு அற்புத கதை கேட்க தயாராகிவிடுவீர்கள். அவர் செல்லும் இடமெல்லாம், நம்ப முடியாத, விசித்திரமான, பயமுறுத்தும் சாகசங்களும் கதைகளும் வெளிப்படும். பல காலமாக இந்த மலைக்குன்றின் வழியாக அவர் வரவில்லை. அவர் நண்பர் அதாவது நம் டூக் பெரியவர் இறந்ததற்குப் பிறகு அவர் இங்கு வரவேயில்லை. சொல்லப்போனால் இங்கு வசிக்கும் எல்லர்களுக்கு அவர் எப்படி இருப்பார் என்பதே மறந்து விட்டது. அவர்கள் எல்லச் சிறுவர்களாகவும், எல்லிச் சிறுமிகளாகவும் இருந்த காலத்தில் காண்டாளர் தன் சொந்த பணி நிமித்தமாக இந்த குன்று பகுதிக்கும், நீரார்ற்றுக்கு அப்பால்பட்ட பகுதிக்கும் வந்து போனதுண்டு. அப்பாவி பில்போவிற்கு இந்த காலை நேரத்தில் தெரிந்ததெல்லாம், கைத்தடியுடன் வரும் ஒரு வயதான உயர மனிதன்தான். கைத்தடியுடன் வரும் வயதானவர் என்றால், கூண் விழுந்த முதியவர் அல்ல; இவர் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வரும் பெரியவர்; கையில் ஒரு கைதடியை ஏந்தி வருபவர்; உயரமான புனல் போன்ற நீல தொப்பி அணிந்திருந்த அவர், பழுப்பு நிறத்தில் ஆளுயர மேலங்கி அணிந்திருந்தார்; வெள்ளி நிறத்தில் ஒரு சால்வை அவர் கழுத்தை சுற்றியிருந்தது; அதன் மேலே வெள்ளை நிற தாடி நீண்டு வளர்ந்து அவர் இடுப்புக்கு கீழே சென்றது. காலில் பெரிய கரும்நிற பூட்ஸ் அணிந்திருந்தார்.

"குட் மார்னிங்!" என்று அழுத்தமாக கர்ஜித்தார் பில்போ. ஆனால் காண்டாலரின் கண்கள், தொப்பியின் விளிம்பு வரை நீண்டிருக்கும் அவரின் அடர்ந்த புருவத்திற்கு பின்னாலிருந்து பில்போவை நோக்கின.

"என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் எனக்கு இது ஒரு நல்ல காலைப்பொழுதாக  இருக்குமென்று சொல்கிறீர்களா? அல்லது, எனக்கு வேண்டுமோ வேண்டாமோ, ஆனால் இது ஒரு நல்ல காலைப்பொழுது என்கிறீர்களா? அல்லது, உங்களுக்கு இது ஒரு நல்ல காலைப்பொழுது என்கிறீர்களா? அல்லது, எல்லாரும் நலமாக இருக்க முயற்சி செய்யவேண்டிய காலைப்பொழுது என்கிறீர்களா?"

"எல்லாவற்றையும் தான் சொன்னேன்" என்றார் பில்போ. "அது போக, வீட்டின் வெளியே இந்த தரமான எல்லர் புகையிலையை குழலில் போட்டு, புகைபிடிக்க உகந்த ஒரு அருமையான காலை நேரம் கூட! உங்களிடம் புகை பிடிக்கும் குழல் இருந்தால், நான் நிரப்பித் தருகிறேன், வந்து உட்காருங்கள். இன்று முழுக்க நேரம் உள்ளது; எந்த அவசரமும் இல்லை. பிறகு, பில்போ தன் வாசலில் உள்ள இருக்கையில் அமர்ந்தார்.
கால்மேல் கால் போட்டுக்கொண்டார். பிறகு அழகான ஒரு பழுப்பு நிற புகை வளையம் ஒன்று அவர் புகைகுழலிளிருந்து வெளிவந்து, மேலே சென்று அலையாமல் கலையாமல் குன்றின் மேலே சென்று மிதக்க ஆரம்பித்தது.
"என்ன அருமை! என்ன நேர்த்தி!" என்றார் காண்டாளர். "ஆனால் புகைவளையம் விட்டு விளையாட இன்று எனக்கு நேரமில்லை. நான் ஒரு சாகசப் பயணத்திற்கு திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்க்கு ஓர் ஆள் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு யாரும் கிடைக்கவில்லை.

<<கண்டிப்பாக! யாரும் கிடைக்க மாட்டார்கள். அதுவும் இந்த ஊரில். நாங்களெல்லாம் சாதாரணமாகவும் அமைதியாகவும் வாழ விரும்புபவர்கள். சாகசம் எல்லாம் எங்களுக்கு பயன்படாது! கொடூரமான, கேவலமான, கஷ்டத்தை கொடுக்கும், அசௌகரியமான காரியங்கள் அவை! இரவு உணவிற்கு உன்னை தாமதமாக்கிவிடும்! இதிலே என்ன தான் இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை...>> என்றார் மிஸ்டர் பில்போ பாகின்ஸ். தன் மேலங்கியின் பைக்குள்ளே ஒரு கையை விட்டுக்கொண்டே, இன்னொரு புகை வளையத்தை (முன்னைவிட பெரியது) விட்டுவிட்டு, அன்று வந்திருந்த தபால்களை எடுத்து படிக்க ஆரம்பித்தார். எதிரே நிற்கும் அந்த கிழவரை கண்டுகொள்ளாமல், அங்கு யாருமே இல்லை என்பது போல் படித்துக்கொண்டிருந்தார். இந்தக் கிழவரை பில்போவிற்கு ஏனோ பிடிக்கவில்லை. அவர் அங்கிருந்து போய் விடுவார் என்று காத்திருந்தார். ஆனால் அக்கிழவர் இம்மி அளவுகூட நகரவில்லை. தன் கைதடியை ஊன்றி நின்றுகொண்டு பில்போவையே வெறித்து பார்த்துகொண்டிருந்தார். பில்போவிற்கு அந்த நிசப்தம் தாங்கவில்லை.
"குட் மார்னிங்!" என்றார் பில்போ கடைசியாக. "எங்களுக்கு சாகசம் எதுவும் தேவையில்லை!  நன்றி! நீங்கள் இந்த குன்றிற்கு மேல் பகுதியிலோ அல்லது நீராற்றைத் தாண்டியோ போய்க் கேளுங்கள்." என்று பேச்சுவார்த்தைக்கு முற்றுபுள்ளி வைப்பது போல் சொல்லி முடித்தார்.
"நீங்கள் 'குட் மார்னிங்கை' எந்தெந்த விஷயதிர்க்கெல்லாம் பயன்படுத்துவீர்கள்?" என்றார் காண்டாளர். "இப்பொழுது நான் இங்கிருந்து போய் விடவேண்டும்; அதுதானே தேவை உங்களுக்கு?"

"ஐயோ! அப்படியில்லை, அப்படியில்லை பெரியவரே! ஆங், உங்கள் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லையே?"

"ஆமாம், ஆமாம் அன்பரே - ஆனால் எனக்கு உங்கள் பெயர் பில்போ பாகின்ஸ் என்று தெரியும். அப்புறம், உங்களுக்கும் என் பெயர் தெரியும். ஆனால் அந்த பெயருக்கு சொந்தக்காரன் நான் தான் என்பது உங்கள் நினைவுக்கு வரவில்லை. நான்தான் 'காண்டாளர்'. காண்டாளர் தான் நான்! என்ன கொடுமை எல்லரே?! பெல்லடோனா டூக்கின் மகன் எனக்கு, வீதியில் பொத்தான் விற்கும் பித்தனுக்கு 'குட் மார்னிங்' சொல்வது போல சொல்வார் என்பதை பார்க்க நான் உயிரோடு இருக்கிறேன்!"

"காண்டாளர், காண்டாளர்! நல்ல கொடுமை! மன்னிக்கவும், மன்னிக்கவும். எங்கள் ‘டூக்’ பெரியவருக்கு ஒரு ஜோடி மந்திர வைரங்களை பரிசாகக் கொடுத்த, பல நாடுகள், பிரதேசங்கள் சென்று திரியும் அந்த சக்திவாய்ந்த மந்திர வாதியல்லவா நீங்கள்! அந்த வைர உருண்டைகள் கூட ஓடி ஒட்டிக்கொண்டு 'பிரிந்து வா!' என்று கட்டளையிடும் வரை வராமல் அடம் பிடிதனவே!  விருந்து நிகழ்ச்சிகளில் அருமை அருமையாக கதை கூட சொல்வீர்களே.


“டிராகன் கதைகள்; கோபுளின்(goblin – நீண்ட காதுடைய மந்திர சக்தி படைத்த பெரிய கண் கொண்ட சிதைந்த மனித உடல் போன்ற உருவம் கொண்ட அறிவு குன்றிய ஜந்துகள்) கதைகள்; அரக்கர்கள் பற்றிய கதைகள்; இளவரசிகளை காப்பாற்றும் கதைகள்; கணவனை இழந்த பெண்களின் மகன்களுக்கு அடிக்கும் திடீர் யோகங்கள், இப்படி பல வித கதைகள் சொல்வீர்களே! எங்கும் காணாத கண்ணை கவரும் வண்ண வண்ண விசித்திர வான வேடிக்கைகளும் பட்டாசுகளும் கூட போட்டுக் காட்டுவீர்களே! எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘டூக்’ தாத்தாவின் கோடை கால விழா கொண்டாட்டத்தில் தானே இந்த வான வேடிக்கைகள் செய்வீர்கள்? அற்புதமான வாணவெடிகள்; ராட்சத லில்லி பூ மாதிரி வானத்தில் தோன்றி சாயுங்காலம் வரை மிதந்து கொண்டிருக்குமே; சில வான வெடிகள் வெடித்து, பெரிய தாமரை பூவையும், தாழம்பூவையும், மல்லிகை செண்டுகளையும் வானத்தில் உலவ விடுமே. மிகவும் அருமை உங்கள் வாணவெடிகள்!”

என்ன உப்பு சப்பு இல்லாமல் பேசும் பாகின்ஸ், திடீர் என்று கவிதை போல பேசுகிறார் என்று பார்க்கிரீர்களா? அது ஒன்றும் இல்லை, பூக்கள் என்றால் அவருக்கு பிரியம், அதான்.


“ஆஹா! பைத்தியக்காரத்தனமாக, சாகச பயணம் போக வேண்டும் என்று, திடீரென்று ஆண் பெண் இளவட்டங்கள் காணாமல் போய்விடுமே! அதற்க்கு காரணமான ‘காண்டாளர்’ தானே நீங்கள்? மரம் ஏறுவது, வெண் தேவர்களை(elf) சந்திப்பது, கப்பலில் பயணம் செய்வது, கண் கானா தேச கடற்கரைக்கு செல்வது; அப்பப்பா! வாழ்க்கை எப்படி களைகட்டி........ அதாவது, நிம்மதியின்றி போனது. அமைதியான இந்த எல்லர் கிராமத்தில் நிறைய குழப்பத்தை உண்டு பண்ணுவீர்கள் அப்போது, இல்லையா? தாங்கள் மன்னிக்க வேண்டும், நீங்கள் இன்னும் இது மாதிரி சில்மிஷ வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பீர்கள் என்று நான் எதிர் பார்க்கவில்லை.”
“வேறெங்கு போவது நான்?” என்றார் அந்த மந்திரவாதி. “எது எப்படி போனாலும், என்னை பற்றி கொஞ்சம் ஞாபகம் இருக்கே. ரொம்ப சந்தோஷம். என்னோட வாணவெடிகள பத்தி ரொம்ப புகழ்ந்து வேற பேசிட்டீங்க. அதனால இந்த நாட்டு மேல இன்னும் கொஞ்ச நம்பிக்கை இருக்கு எனக்கு. சரி. உங்க ‘டூக்’ தாத்தாவுக்காகவும், உங்கம்மா ‘பெல்லடோணா” பேருக்காகவும், நீங்கள் கேட்டதை நான் கட்டாயம் கொடுக்கிறேன்.”

“மன்னிக்க வேண்டும். நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லையே?”

“கண்டிப்பாக கேட்டீர்கள்! இப்போ இரண்டாவது முறை வேறு கேட்டீர்கள். என்னுடைய மன்னிப்பு. கொடுத்து விடுகிறேன். மன்னித்து விடுகிறேன். அது போக, உங்களை இந்த சாகச பயணத்திலும் சேர்த்துக்கொள்கிறேன். எனக்கு சுவாரசியமாக இருக்கும். உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். லாபகரமாகவும் இருக்கும். நம்பவே முடியாததாக இருக்கும். ஆனால் சீக்கிரம் நம்பி விடுவீர்கள்.”

“மிக்க வருத்தங்களுடன் உங்கள் அழைப்பை நான் மறுக்க வேண்டியிருக்கிறது. அழைப்புக்கு நன்றி. என்னால் முடியாது. கண்டிப்பாக இன்றைக்கு இல்லை. குட் மார்னிங். ஆனால் நீங்கள் கண்டிப்பாக தேநீர் அருந்த என் வீட்டிற்கு வர வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும். ஏன் நீங்கள் நாளைக்கு வரக்கூடாது? நாளைக்கு வாருங்கள். வணக்கம்! வருகிறேன்!”

அத்துடன், எல்லர், திரும்பி, சரக்கென்று தன் பச்சை நிற வட்ட கதவுக்குள் புகுந்து விட்டார். மரியாதை குறைவாக நடக்க கூடாது என்று, சிறிது இடைவெளி விட்டு, பின்னர் கதவை சாத்திக்கொண்டார். மந்திரக்காரர்கள் மீது எல்லாருக்கும் சிறிது பயம் தானே.

“எதற்காக நான் அவரை தேநீர் விருந்துக்கு அழைத்தேன்? அட கொடுமையே!” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு சரக்கு அறைக்கு(pantry) சென்றார் நம் பாகின்ஸ்.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் காலை உணவு அருந்தியிருந்தார். ஆனாலும் தன் பயம் தெளிய, ஒன்றிரண்டு ‘கேக்’கும், அப்புறம் ஏதாவது பானம் அருந்தினாலும் நன்றாக இருக்கும் என்று உள்ளே சென்றார்.

காண்டாளர் இன்னும் கதவுக்கு வெளியே தான் நின்றுகொண்டிருந்தார். அமைதியாக கதவையே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார் வெகு நேரத்திற்கு.

பிறகு காண்டாளர் கதவு அருகில் வந்து, தனது கைத்தடியின் கூறிய நுனியால், எல்லரின் அந்த அழகான வட்ட வடிவ பச்சை வர்ண வீட்டுக்கதவில் விசித்திர அடையாளம் ஒன்று வரைந்தார். பிறகு அவ்விடத்தைவிட்டு கிளம்பினார். அதே சமயத்தில், தன் இரண்டாவது ‘கேக்’கை முடித்துக்கொண்டிருந்த நம் பில்போ அவர்கள், திறமையாக, ஒரு சாகச பயணத்தில் இருந்து தப்பி விட்டோம் என்று மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அடுத்த நாள் அவர் காண்டாளரைப்பற்றி முற்றும் மறந்து விட்டார். வழக்கமாக, அவர் தன் காலண்டரில் “புதன் – காண்டாளர்” என்று குறித்து வைத்திருந்தால் அல்லவா அவருக்கு நினைவிருக்கும். நேற்று அவர் இருந்த பதற்றத்தில் இதையெல்லாம் மறந்து விட்டார். தேநீர் வேலை நேரத்திருக்கு சற்று முன், அவர் வாசல் அழைப்பு மணி ‘டடாங்’ என்று ஒலித்த போது தான் அவருக்கு காண்டாளரைப் பற்றி நினைவு வந்தது. அவசரமாக ஓடி, அடுப்பில் தேநீர் கொதி கலனை வைத்தார். பின், புதியதாக ஒரு தேநீர் கோப்பு (cup) மற்றும் வட்டு தட்டையும்(saucer), ஒன்றிரண்டு ‘கேக்’குகளையும்(இனிப்பு ரொட்டி) வெளியில் எடுத்து வைத்துவிட்டு கதவை திறக்க ஓடினார்.

கதவை திறந்து கொண்டே, “தாமதத்திற்கு மன்னிக்கவும்” என்று சொல்ல வாயெடுத்த அவர், வாசலில் நிற்பது காண்டாளர் இல்லை என்று தெரிந்ததும் வாயை மூடிக்கொண்டார். அங்கே நின்றிருந்தது ஒரு கற்குள்ளன்(dwarf). அவன் தன் நீல நிற தாடியை இழுத்து, தன் தங்க இடுப்பு பெல்ட்டுக்குள் செருகியிருந்தான். அவன் போட்டிருந்த கரும் பச்சை முக்காட்டின் உள்ளே இருந்து பளீரென தெரிந்தன அவன் கண்கள். 


கதவு திறந்த வேகத்தில், அழைக்கப்பட்ட விருந்தாளியைப் போல உள்ளே வந்துவிட்டான் அந்த கற்குள்ளன். முக்காடு பொருத்திய அவன் மேலங்கியை, அருகில் இருந்த பல மர ஆப்புகளில் ஒன்றில் மாட்டிவிட்டு, குனிந்து வணங்கி “நான் துவாளின், உங்கள் சேவைக்காக!” என்று சொன்னான்.

அதிர்ச்சியிலிருந்த எல்லர், என்ன ஏதென்று கூட கேட்காமல் “நான் பில்போ பாகின்ஸ், உங்கள் சேவைக்காக!” என்றார். பிறகு ஒரே அமைதி. இருவரும் பேசவில்லை. இந்த நிசப்தம் தாங்க முடியாமல், பில்போ “இப்பொழுது தான் நான் தேநீர் அருந்தலாம் என்று இருந்தேன். ஏன் நீங்கள் வந்து கொஞ்சம் அருந்தக் கூடாது” என்று கொஞ்சம் விறைப்பாகவே சொன்னாலும், அன்போடு அழைத்தார் பில்போ. சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று ஒரு கற்குள்ளன் உங்கள் வரவேற்பறையில் வந்து, தன் பொருட்களை தொங்க விட்டால், என்ன தான் செய்வீர்கள் நீங்கள்?

அவர்கள் மேஜைக்கு சென்று கொஞ்ச நேரம் தான் ஆகியிருந்தது. சொல்லப் போனால் இன்னும் மூன்றாவது ‘கேக்’கை கூட ஆரம்பிக்கவில்லை. முன்பைவிட சத்தமாக வந்தது அழைப்பு மணி ஓசை மறுபடியும்.

“ஒரு நிமிடம் இருங்கள்“ என்று சொல்லிவிட்டு கதவைத் திறக்க சென்றார் நம் எல்லர்.

“ஒரு வழியாக வந்துவிட்டீர்களா?” என்று காண்டாளரிடம் கேட்க தயாராய் இருந்தார் பில்போ. ஆனால் வந்தது காண்டாளர் இல்லை. வாசற்படியில் நின்றது ஒரு வினோதமான வயதான வெள்ளைத் தாடி கொண்ட, ரத்த சிவப்பு நிற முக்காடு போட்டிருந்த ஒரு கற்குள்ளன். இந்த கற்குள்ளனும், கதவு திறந்த வேகத்தில், ஏதோ, எதிர்பார்க்கப்பட்ட விருந்தாளியைப் போல உள்ளே எம்பிக் குதித்தான்.

துவாளினுடைய பச்சை முக்காடு தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த இந்த குள்ளன் “ஒ அவர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறதே” என்று சொல்லிக்கொண்டே, தன்னுடைய சிவப்பு முக்காட்டை அதன் பக்கத்தில் மாட்டிவிட்டு, தன்னுடைய மார்பில் கை வைத்து “நான் பாளின் உங்கள் சேவைக்காக!” என்று சொன்னான்.

“நன்றி!” என்று சொன்னார் பில்போ மூச்சிரைப்புடன். இது சரியான பதில் இல்லை தான். ஆனால், இவர்களின் வருகையால் பதற்றம் அதிகமாகியிருந்தது பில்போவுக்கு.

விருந்தாளிகள் என்றால் பில்போவுக்குப் பிடிக்கும். ஆனால் அவர்கள் வருகை பற்றி அவருக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும், அத்தோடு அவர்களைத் தானே அழைத்திருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார் பில்போ.

திடீர் என்று அவருக்கு ஒரு பயம் தோன்றியது. கேக்குகள் காலியாகப்போகின்றனவே என்று. அத்தோடு, வீட்டுக்கு வந்தவர்களுக்கு நல்ல உபசரணை செய்வது தான் ஒரு எல்லனின் நல்ல பழக்கம். எவ்வளவு அசௌகரியமாக இருந்தாலும், விருந்தோம்பலில் தவறாமல் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

ஒரு பெருமூச்சிற்குப் பிறகு, “வாருங்கள் வந்து தேநீர் பருகுங்கள்” என்று சொல்லி சமாளித்தார் பில்போ.

“ஒரு கோப்பை பீர் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும், உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றால். என்ன சொல்கிறீர்கள் அன்பரே? அத்தோடு, வெள்ளை எள் போட்ட ‘கேக்’குகள்(இனிப்பு ரொட்டி) ஒன்றிரண்டு உங்களிடம் இருக்கின்றனவா?” என்றான் வெள்ளை தாடி வைத்த பாளின்.

“ஒ, நிறைய இருக்கின்றன!” என்று தன்னை அறியாமலேயே பதில் சொன்ன பில்போ, பீர் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலத்தடி அறை(cellar) நோக்கி சென்றார். ஒரு பீர் கோப்பை(pint) நிரப்ப, நிலத்தடி அறைக்கும், இரவு சாப்பாட்டிற்கு பிறகு உண்ணுவதற்காக அவர் அன்று மத்தியானம் வேக வைத்த அழகான வட்ட வடிவ எள் கேக்குகளில் இரண்டை எடுக்க சரக்கு அறைக்கும்(pantry) சென்றார்.

அவர் திரும்பி வந்த போது, சாப்பாட்டு மேஜையில், பாளினும் துவாளினும் பழைய நண்பர்களைப்போல பேசிக்கொண்டிருந்தார்கள் (உண்மை என்னவென்றால், அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள்). பில்போ கேக்கையும், பீரையும் அவர்கள் முன் தடால் என்று வைத்த அந்நேரத்தில், அழைப்பு மணி அலறியது. உடனே மீண்டும் ஒரு முறை அலறியது.

“கண்டிப்பாக இது காண்டாளர் தான்” என்று எண்ணிக்கொண்டு சுரங்கம் போன்ற பாதை வழியாக வேகமாக விரைந்தார் பில்போ. ஆனால் அது காண்டாளர் இல்லை. இன்னும் இரண்டு கற்குள்ளர்கள் வந்திருந்தார்கள். இருவரும் மஞ்சள் தாடி, வெள்ளி பெல்ட்டுடன் நீல நிற முக்காடு அணிந்திருந்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும் ஒரு மண்வெட்டியும், ஒரு பை நிறைய வேலைப்பாட்டுக் கருவிகளும் வைத்திருந்தார்கள். கதவு திறக்க ஆரம்பித்த உடனே, எம்பி குதித்தார்கள் உள்ளே. இந்த தடவை பில்போ கொஞ்சம் கூட ஆச்சரியப்படவில்லை.

“தாங்களுக்கு எதுவும் உதவி தேவையா, என் அருமை கற்குள்ளர்களே?” என்றார் பில்போ.

“நான் கிளி, உங்கள் சேவைக்காக!” என்றான் ஒரு குள்ளன். “இந்த பிளி’யும் கூட!” என்று அடுக்கினான் இன்னொரு குள்ளன். இருவரும் தங்கள் நீல நிற முக்காட்டை உருவி எடுத்து விட்டு, தலை வணங்கி நின்றார்கள்.

இந்த தடவை தன் நல் நடத்தை நினைவுக்கு வந்ததால் “நான் பில்போ, உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் சேவைக்காக!” என்றார் எல்லர்.

“துவாளினும் பாளினும் வந்து விட்டார்கள் போல” என்றான் கிளி. “கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கொள்ள வேண்டியது தான்!”

“கூட்டமா!” மனதில் எண்ணிக்கொண்டார் மிஸ்டர் பாகின்ஸ். “இது போற போக்கு எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு நாழி நான் உட்கார்ந்து கொள்கிறேன். கலங்கும் என் புத்தியை ஒருவழிப் படுத்த வேண்டும். பானம் ஏதாவது குடித்தால் தான் பதற்றம் குறையும் போலிருக்கிறதே.” அந்த நான்கு கற்குள்ளர்களும் மேஜயை சுற்றி உட்கார்ந்து கொண்டு, சுரங்கங்கள் பற்றியும், தங்கம் பற்றியும், கோபுளின்களுடன் நடந்த கைகலப்பு பற்றியும், டிராகன் சூறையாடியது பற்றியும், இன்னும் பல பில்போவுக்கு புரியாத விஷயங்கள் பற்றியும், அப்படியே புரிந்தாலும், அவை மிகவும் அதீத சாகச காரியங்கள் போல் பட்டதால், பில்போவிர்க்கு அவைகளை காது கொடுத்துக்கூட கேட்கவேண்டும் என்று தோணாத பல செய்திகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதான் ஒரு மூலையில் உட்கார்ந்து பில்போ ஒரு வாய் பானம் அருந்தியிருந்தார்.

‘டிங்ங்-டாங்ங்-லிங்ங்’-டேங்ங் என்று மறுபடியும் அவர் அழைப்பு மணி அலறியது. ஏதோ, ஒரு குரும்புக்கார எல்லச்சிருவன் அழைப்பு மணியின் கைப்பிடியை பிடுங்க முயற்சிப்பது போல் இருந்தது. “யாரோ வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது” என்றார் பில்போ, குழப்பத்துடன். “சத்தத்தை பார்த்தால், நான்கு பேர் வந்திருக்கிறார்கள் போல தெரிகிறது” என்றான் பிளி. “அத்தோடு, நாங்கள் வரும்போது, தூரத்தில் அவர்கள் வருவதைப் பார்த்தோம்”

நம் அப்பாவி எல்லர், வரவேற்பறையிலேயே தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டார். என்ன நடந்தது, என்ன நடக்கப்போகிறது, இவர்கள் எல்லோரும் இரவு உணவிற்கு தாங்குவார்களா என்று, யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இப்பொழுது, இது வரை இல்லாத அளவுக்கு மீண்டும் அலறியது அழைப்பு மணி. பில்போ, கதவை நோக்கி கால் தெறிக்க ஓடினார்.

வந்தது நான்கு பேர் இல்லை, ஐந்து பேர். அவர் வரவேற்பறையில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்த சில வினாடிகளில் இன்னொரு கற்குள்ளன் வந்து சேர்ந்துவிட்டான் போல.

கதவின் தாழ்ப்பாளை திறந்தாரோ இல்லையோ, அதற்குள் அவர்கள் எல்லாரும் வீட்டிற்குள்ளே வந்துவிட்டார்கள். எல்லாரும் தலை குனிந்து ஒருவர் பின் ஒருவராக “உங்கள் சேவைக்காக!” என்று சொன்னார்கள். டோரி, நோரி, ஓரி, ஆயின் மற்றும் கிளாயின் என்பது தான் அவர்களின் பெயர்கள். விரைவில், இரண்டு ஊதா நிற முக்காடுகளும், ஒரு பழுப்பு நிற முக்காடும், ஒரு சாம்பல் நிற முக்காடும், ஒரு வெள்ளை நிற முக்காடும் கொம்புகளில் தொங்கின. அவர்கள் எல்லாரும், தத்தம் தங்கம் அல்லது வெள்ளி பெல்ட்டுகளில் கைவைத்துக்கொண்டு அணிவகுத்து மற்றவர்களுடன் சேர்ந்துகொள்ள உள்ளே சென்றார்கள். நிஜமாகவே ஒரு கூட்டம் என்று சொல்லும் அளவுக்கு கற்குள்ளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. சிலர் மது பானம் கேட்டனர், சிலர் உதவிக்கு ஒரு வாயிற்காவலாளி வேண்டும் என்று கேட்டனர், ஒரு குள்ளன் காபி வேண்டும் என்றான், எல்லா குள்ளர்களும் இனிப்பு ரொட்டி(cake) வேண்டும் என்று கேட்டனர். இதனால் நம் எல்லர் கொஞ்ச நேரத்திற்கு எதைப்பற்றியும் யோசிக்க முடியாமல் இந்த பரிமாறும் வேளையில் ஈடுபட்டிருந்தார்.
ஒரு பெரிய கூஜா நிறைய காபி அடுப்பில் வைக்கப்பட்டிருந்தது, எள் போட்ட இனிப்பு ரொட்டிகள் காலியாகியிருந்தன, வெண்ணையும், பால் பவுடரும் கலந்து செய்த உருட்டு பிஸ்கட்டுகளை குள்ளர்கள் தற்போது சாப்பிட ஆரம்பித்திருந்தனர். அப்பொழுதான் யாரோ வேகமாக கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அழைப்பு மணி ஓசை இல்லை. எல்லரின் அழகான பச்சைக் கதவில் யாரோ ‘டிராட் டிராட்’ என்று தட்டுவது கேட்டது. யாரோ தடி ஒன்றை வைத்து கதவை அடித்துக்கொண்டிருந்தனர்!

பில்போ சுரங்கப்பாதை வழியாக, மிகுந்த கோபத்துடன் விரைந்தார். கூட, கடும் குழப்பம் மற்றும் கடுப்புடனும் ஓடினார். தன் வாழ்க்கையிலேயே, இந்த மாதிரி ஒரு இடர்பாடான புதன்கிழமை வந்ததில்லை. சடாரென்று கதவைப் பற்றி இழுத்தார் பில்போ. இழுத்த வேகத்தில், அவர்கள் அனைவரும் உள்ளே வந்து விழுந்தனர், ஒருவர் மேல் ஒருவராக அடுக்கி வைத்தது போல். இன்னும் கொஞ்சம் கற்குள்ளர்கள். நான்கு குள்ளர்கள். பின்னால், கைத்தடியில் சாய்ந்து நின்று கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார் காண்டாளர். அவர் தட்டிய தட்டில், கதவில் ஒரு நல்ல பள்ளமே உருவாகியிருந்தது. அத்தோடு, அவர் நேற்று காலையில் அவர் போட்டிருந்த ரகசிய அடையாளத்தையும் அழித்திருந்தார்.

“பார்த்து! பார்த்து!” என்றார் காண்டாளர். “நண்பர்களை வாசலில் காக்க வைத்துவிட்டு பிறகு தடாலென்று துப்பாக்கி வெடிப்பது போல் கதவைத் திறக்கிரீர்களே! வழக்கமான பில்போ போல இல்லையே நீங்கள் இன்று நடந்து கொள்வது. நானே இவர்களை அறிமுகப்படுத்துகிறேன். இதோ பைபர், போபர், பாம்பர் மற்றும் முக்கியமாக தோரின் அவர்கள்!”

பைபர், போபர் மற்றும் பாம்பர் மூவரும் வரிசையில் நின்று “தங்கள் சேவைக்காக!” என்று கூறினர். பிறகு அவர்கள், இரண்டு மஞ்சள் நிற முக்காடுகளையும், ஒரு வெளிர் பச்சை நிற முக்காட்டையும் மாட்டினார்கள், அத்தோடு, வெள்ளி குஞ்சம் வைத்த கடல் நீல நிற முக்காடும் தொங்கியது இப்போது. இந்த கடைசி முக்காடு, மாபெரும் முக்கியமான கற்குள்ளன் தோரின்’னுடையது. இது யாருமல்ல, அந்த மாபெரும் தோரின் ஒகன்சீல்டு தான். அத்தோடு, பில்போவின் மிதியடியில் குப்புற விழுந்தது, அதுவும், பைபர், போபர் மற்றும் பாம்பர் இவர்கள் தன் மீது அடுக்கடுக்காய் விழுந்தது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை இவருக்கு. சொல்லப்போனால், பாம்பர் பார்ப்பதற்கு மாமிச மலை மாதிரி இருந்தான். தோரின், கர்வத்தோடு சேவை கீவை பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார். பாவம் மிஸ்டர் பாகின்ஸ், பலதடவை மன்னிப்பு கேட்டார்; அதன் பிறகு தான் தோரின் “பரவாயில்லை விடுங்கள்” என்று முனறிவிட்டு தனது சிடுசிடுப்புத்தனம் குறைந்தது போல் தோன்றினார்.

வரிசையாகத் தொங்கும் பதிமூன்று முக்காடுகளையும் (விசேஷங்களில் அணியக்கூடியவை), தனது செம்பருத்தி வடிவ(pointed hat) தொப்பியையும் பார்த்து விட்டு, “நாம் எல்லாரும் வந்துவிட்டோம்” என்றார் காண்டாளர். “நல்ல மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும் இந்த சந்திப்பு!

கடைசியாக வந்த நமக்கு ஏதாவது உணவும் பானமும் மிச்சம் இருக்கும் என்று நினைக்கிறேன்! என்ன? தேநீரா! இல்லை வேண்டாம். கொஞ்சம் சிவப்பு மதுரசம்(red wine) இருந்தால் போதும் எனக்கு.” “எனக்கும் கூட கொஞ்சம்!” என்றார் தோரின். “ரச பெர்ரி பழக் களிம்பும்(raspberry jam), கொஞ்சம் ஆப்பிள் பழ பிட்டும்(apple-tart) இருந்தால் போதும் எனக்கு” என்றார் பைபர். “கறி போட்ட வெண்ணைபிட்டு துண்டுகளும்(mince-pies), கொஞ்சம் இளஞ்சூடு காட்டிய பாலாடைக்கட்டியும்(cheese) எனக்கு” என்றார் போபர். “பன்றிக்கறி களிம்பு பிட்டும்(pork-pie), துண்டு போட்ட காய்கனிகளும்(salad) எனக்கு” என்றார் பாம்பர். “இன்னும் கொஞ்சம் இனிப்பு ரொட்டிகளும்(cake), நொதித்த பார்லி மதுக்கஷாயமும்(ale), காபியும் கொண்டு வாருங்கள்” என்று குரல் கொடுத்தனர் மற்ற குள்ளர்கள் கதவின் உள்ளே இருந்து.

சரக்கு அறைகளை நோக்கி ஓடிய எல்லரை நோக்கி, “ஒன்றிரண்டு முட்டைகளை உடைத்து வறுங்கள், தங்களுடைய நண்பனான எனக்கு!” என்று கத்தினார் காண்டாளர். “அப்படியே கொஞ்சம் ஊறுகாயும், ஒரு தட்டு ஊற வைத்த கோழிக்கறியும் எடுத்துக்கொண்டு வந்துவிடுங்கள்!”

“என்னுடைய சமையலறை அலமாரிக்குள்ளே என்ன இருக்குமென்று எனக்குத் தெரிந்த அளவிற்கு தெரியும்போலிருக்கிறது இவர்களுக்கு!” என்று நினைத்துக்கொண்டார் மிஸ்டர் பாகின்ஸ்.



ஏறக்குறைய குழப்பத்திலிருந்த மிஸ்டர் பாகின்சுக்கு இப்போது லேசாக சந்தேகம் வந்தது; நாசமாய்ப் போன அந்த சாகசப் பயணம் நேராக நம் வீட்டிற்க்கே வந்து விட்டதோ? எல்லா பாட்டில்களையும், தட்டுகளையும், கத்திகளையும், முள் கரண்டிகளையும், கண்ணாடி டம்ளர்களையும், பாத்திரங்களையும், ஸ்பூன்களையும் கொண்டு வந்து பரிமாறும் தட்டுகளில் அடுக்கி வைப்பதற்குள், அவருக்கு கோபம் தலைக்கேறி, முகம் சிவந்து, எரிச்சல் தாண்டவமாடியது.

“நாசமாய்ப் போன இந்த கற்குள்ளர்கள்!” என்று சத்தம் போட ஆரம்பித்தார். “எதையாவது வந்து எடுத்து வைக்கிறார்களா இவர்கள்? எல்லா வேலையும், நானே செய்ய வேண்டி இருக்கிறது!” அங்கே பாருங்கள்! பாளினும், துவாளினும் சமையலறை கதவில் வந்து நின்றார்கள், பிளியும் கிளியும் அவர்களுக்குப் பின்னே நின்றார்கள், அவர் கரண்டி என்று சொல்வதர்க்குள், பரிமாரும் பாத்திரங்களை சரக்கென்று எடுத்துச் சென்றார்கள், மட மடவென இரண்டு மேஜைகளை வரவேற்ப்பரையில் வைத்து, அத்தனை உணவு வகைகளையும் அழகாய் பரப்பி வைத்தார்கள்.

காண்டாளர் கூட்டத்தின் தலைமை சீட்டில் உட்கார, பதிமூன்று குள்ளர்களும் அவரைச்சுற்றி அமர, பில்போ நெருப்புத் தொட்டி(fireplace) அருகில் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து ஒரு பிஸ்கட்டை கொரித்துக்கொண்டே (அவருக்கு இருந்த பசி எங்கோ ஓடிவிட்டது இப்போது), இதெல்லாம் வழக்கமாக நடக்கக் கூடியவை தான், சாகசமும் இல்லை, ஒன்றும் இல்லை என்று நல்லதாக எடுத்துக்கொள்ள முயற்ச்சித்தார். குள்ளர்கள் சாப்பிட்டனர் சாப்பிட்டனர், சாப்பிட்டுக்கொண்டே இருந்தனர்; பேசினர் பேசினர், பேசிக்கொண்டே இருந்தனர்; நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து, நாற்காலிகளில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். பில்போ எழுந்து, தட்டுகளையும், டம்ளர்களையும் எடுக்க ஆரம்பித்தார்.

“ராத்திரி இருந்து சாப்பிட்டு விட்டு தானே போவீர்கள்?” என்றார் மரியாதைக்காக ஆனால் வேண்டா வெறுப்பாய் கேட்கவில்லை. “கண்டிப்பாக!” என்றார் தோரின். “அதன் பிறகு வெகு நேரத்திற்கு அப்புறம் தான் வந்த விஷயத்தைப் பற்றியே பேசவேண்டும். இப்போ கண்டிப்பாக ஒரு பாட்டு வேண்டும். எல்லாவற்றையும் எடுத்து ஓரமாக வையுங்கள்!”

அதன் பிறகு, பன்னிரண்டு கற்குள்ளர்களும் (தோரின் மட்டும் வரவில்லை, அவர் மிக முக்கியமானவர், அவர் வராமல் அங்கேயே காண்டாளரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்) எழுந்து கொண்டனர், எல்லா பொருட்களையும் உயரமாக அடுக்கினார்கள், அகல தட்டில் அடுக்கி எடுத்துச் செல்லாமல், அவர்கள் கையிலேயே மாபெரும் கோபுரம் போல தட்டுகளை அடுக்கி அதன் உச்சியிலே ஒரு பாட்டிலையும் வைத்து ஒற்றைக் கையில் கொண்டு சென்றார்கள். நமது எல்லர், அவர்கள் பின்னாலேயே அலறி அடித்து ஓடினார். “பார்த்து! பார்த்து!” “உங்களுக்கு ஏன் சிரமம்! நானே கொண்டு போகிறேன்.”

இதையெல்லாம் கேட்காமல் குள்ளர்கள் பாட ஆரம்பித்தார்கள்.

“தட்டை உடை! கண்ணாடி டம்ளரை நொறுக்கு!
கத்தியை மடக்கு! முள் கரண்டியை முடக்கு!
பில்போவுக்கு கடுப்பு! அதுதான் கொடுக்கும்!
பாட்டிலை அடித்து! அதன் மூடியை கொளுத்து!
துணியைக் கிழித்துப் பின் எண்ணையை ஊற்று!
பாலையும் ஊற்று, தரையிலே பார்த்து!
எலும்புகளை எடுத்து, படுக்கையிலே கொட்டு!
சாராயம் பிடித்து, கதவோரம் ஊத்து!
சட்டியைப் பிடித்து, கரண்டியாலே சாத்து!
இதற்கும் பிறகு, உடையாமல் இருந்தால்,
உதைத்து, வராண்டாவில், உருள, விடு!
பில்போவுக்கு கடுப்பு! அதுதான் கொடுக்கும்!
அதனால, பார்த்து! தட்டுகளைப் பார்த்து!
பார்த்து! பார்த்து! பத்திரமாய்ப் பார்த்து!”

இல்லை இல்லை. இந்த வன்முறைச் செயல்களையெல்லாம் அவர்கள் செய்யவில்லை. எல்லர் சமையலறை நடுவில் நின்று கொண்டு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அங்கும் இங்கும் பார்ப்பதற்குள், மின்னல் வேகத்தில், அத்தனை பாத்திரங்களையும், கழுவி, துடைத்து, பத்திரமாக அடுக்கி வைத்துவிட்டார்கள் இந்த கற்குள்ளர்கள்.



எல்லாரும் திரும்பி வந்து பார்த்த போது, தோரின், நெருப்புத் தொட்டி(fireplace fender) மேல் காலை வைத்துக் கொண்டு, வெது வெதுப்பாக குளிர் காய்ந்து கொண்டே புகை பிடித்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய புகை வளையங்களை விட்டுக்கொண்டிருந்தார். அவர் எங்கு சொல்கிறாரோ, அங்கெல்லாம் புகை வளையங்கள் சென்றன. கூரையின் புகைபோக்கி அருகே ஒன்று சென்றது. வரவேற்பறையின், அலங்கார ஆளுயர கடிகாரத்திற்கு பின்னால் ஒன்று சென்றது, மேஜைக்கு அடியில் ஒன்று போனது, அறையின் உட்கூரையில் ஒன்று திரிந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த வளையங்கள் எங்கே சென்றாலும், காண்டாளரிடம் தப்பிக்க முடியவில்லை. காண்டாளர் தன் சிறிய மண் குழாயிலிருந்து(smoking pipe), சிறு புகை வளையங்களை உருவாக்கி, தோரினுடைய ஒவ்வொரு, பெரிய புகை வளையங்களின் நடுவே புகுந்து செல்லுமாறு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார். என்ன ஒரு விளையாட்டு! அத்தோடு, நம் மந்திரவாதி காண்டாளரின் புகை வளையங்கள் பச்சை நிறமாக மாறி திரும்பி வந்து, அவர் தலைக்கு மேலே நின்று கொண்டன. அதற்குள்ளாகவே ஏகப்பட்ட வளையங்கள் அவர் தலைக்கு மேலே சேர்ந்து, மேக மூட்டம் போல் ஆகியிருந்தன. அதனால், அறையின் மெல்லிய வெளிச்சத்தில், அவர் வித்தியாசமாக ஏதோ மந்திர ஜாலங்கள் செய்பவரைப் போல் தோன்றினார். இதை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பில்போவுக்கு, (புகை வளையங்கள் என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம்) நேற்று அவர் மலைக் குன்றை நோக்கி காற்றிலே அனுப்பிய புகை வளையங்களைப் பற்றி பெருமையாக நினைத்தது நினைவுக்கு வந்ததும், வெட்கமாக இருந்தது.

“இப்போது ஒரு நல்ல பாட்டு!” என்றார் தோரின். “உங்கள் வாத்தியங்களை கொண்டாருங்கள்!”

கிளியும், பிளியும் தங்கள் பைகளில் இருந்து சிறிய, பிடில் வாத்தியக் கருவிகளைக்(வயலின் போன்ற ஆனால் சிறிய கருவிகள்) கொண்டு வந்தார்கள். டோரி, நோரி, ஓரி தங்கள் மேலங்கியில்(coat) இருந்து புல்லாங்குழல்களை எடுத்தார்கள். பாம்பர், வரவேற்பறையில் இருந்து, மேளம் ஒன்று கொண்டு வந்தார். பைபரும், போபரும் வெளியே சென்று, ஊன்று கோள்களுடன் சாத்தி வைக்கப்பட்டிருந்த நாகசுரங்களை(clarinet) கொண்டு வந்தார்கள். “ஒரு நிமிடம்! என்னுடையது திண்ணையில் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு துவாளினும், பாளினும் கிளம்பினார்கள், “என்னுடையதையும், எடுத்துக்கொண்டு வாங்க!” என்றார் தோரின். அவர்கள் திரும்பி வந்த போது, இரண்டு ஆளுயர (அவர்கள் உயரத்திற்கு) தம்புராக்களையும்(viol), அத்தோடு, பச்சை நிற துணி சுற்றியிருந்த தோரினுடைய யாழ்(harp) கருவியையும் கொண்டு வந்தார்கள். அந்த யாழ் தங்கத்தில் செய்யப்பட்ட ஒரு அழகான கருவி. தோரின் அதன் நரம்புக் கம்பிகளை மீட்டிய உடன், சடாலென்று இனிமையான இசை எல்லாரிடமும் இருந்து ஒரே நேரத்தில் ஆரம்பித்தன. இந்த இனிமையான கீதம் பில்போவை மயக்கி, அப்படியே குன்றின் அடியில் இருந்த தன் எல்லன் குழியை விட்டு, நீராற்றைத் தாண்டி, எங்கோ கண் காணாத தூர தேசத்தில், இருண்டு போன ஒரு பிரதேசத்தில், பிரகாசமாக ஜொளிக்கும் நிலவின் கீழே கொண்டு சென்றது.

அறையில், குன்றின் பக்கவாட்டில் இருந்த திறந்த ஜன்னல் வழியாக, அந்த இருள் உள்ளே வந்தது போல் இருந்தது. அவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்த நெருப்புத் தொட்டியில் தீ காற்றில் மினுக்கியது -இது ஏப்ரல் மாதம்- இருந்தும் அவர்கள் இசை தொடர்ந்தது. காண்டாளரின் தாடியின் நிழல் சுவற்றிலே மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது. நெருப்பு அணைந்து, நிழல்கள் எல்லாம் மறைந்து, அறை முழுவதும் இருண்டு போனது, ஆனாலும் அவர்கள் நிற்காமல் வாசித்துக்கொண்டே இருந்தார்கள். திடீரென்று ஒருவர் பாட, அவர்கள் வாசிக்க வாசிக்க இன்னொருவரும் பாட ஆரம்பித்தனர்; கணீரென்ற அந்த கற்குள்ளர்களின் குரல், பூமிக்கு அடியில் பல மைல்கள் ஆழத்தில் அமைந்திருந்த அவர்களின் புராதன வீடுகளில் இருந்து ஒலித்தது. இதோ இது தான் அவர்கள் பாடிய பாட்டு வரிகளின் ஒரு பகுதி.

“வெகு தூரத்தில், வெண்பனி படர்ந்த மூடுபனிமலையில்,
அதன் குளிரில், மலையின் அடியில், அதி ஆழத்தில்,
பாதாள அறைகளும், புராதன குகைகளும் இருக்கு,
பொழுது சாய்வதற்குள், போக வேண்டும் நாங்கள்,
மின்னும் மந்திர தங்கத்தை தேடி, போக வேண்டும் நாங்கள்.
புராதன கதையில் வரும் கற்குள்ளர்கள், செய்தார்கள்
மந்திரம். ஓசையெழுப்பும் மணி போல,
அடித்தன சம்மட்டிகள். அமானுஷ்ய ஜந்துக்கள் உறங்கும்
பாதாள சுரங்கங்களில், குன்றுகளின் அடியில்,
குடைந்தெடுத்த வராண்டாக்கள். அந்தக்கால ராஜாவுக்கும்,
வேண்தேவர் கோமானுக்கும்(elvish lord), மின்னும் தங்க
குவியல்கள் பல செய்தார்கள். உருக்கினார்கள்,
வார்த்தார்கள், சம்மட்டியால் அடித்து செய்தார்கள்,
ஒளியைப் பிடித்து, வைர வைடூரியங்களில் பதுக்கி,
உடை வாளின் கைப்பிடியில் பதித்து வைத்தார்கள்.
வெள்ளிச் சரமெடுத்து, மாலையாக செய்து,
நட்சத்திரங்கள் தொங்க விட்டார்கள். ராஜாக்களின்
தலைக்கவசத்தில், டிராகன் கக்கிய தீயை மாட்டினார்கள்
வளைத்த கம்பிகளில், நிலவொளியையும், சூரிய
ஒளியையும் நெய்தார்கள்.

வெகு தூரத்தில், வெண்பனி படர்ந்த மூடுபனிமலையில்,
அதன் குளிரில், மலையின் அடியில், அதி ஆழத்தில்,
பாதாள அறைகளும், புராதன குகைகளும் இருக்கு,
பொழுது சாய்வதற்குள், போக வேண்டும் நாங்கள்,
எப்போ தொலைந்த எங்கள் தங்கத்தை மீட்க.

தனக்கென்று கூஜாக்களை தாங்களே செதுக்கி, தங்கத்திலே
யாழிசைக் கருவி செய்து, மனிதனின் வாசம் படாத
அந்த பாதாளத்திலே வாழ்ந்திருந்தார்கள். மனிதர்களும்,
வெண் தேவர்களும்(elf) கேட்டிராத பல பாடல்கள்
பாடினார்கள்.

உச்சியிலே ஆரவாரம் செய்தன பைன் இன மரங்கள்.
இரவிலே காற்று புலம்பியது பார்த்து. செந்தணல்
தீயின் ஜுவாலை பரவியது எங்கும். கைப்பந்தம்
எரிவது போல், எரிந்தன மரங்கள். பள்ளத்தாக்கில்
மணியோசை எழும்பியது. அண்ணாந்து பார்த்த
வீரர்களின் வெளிறிய முகங்கள் பயத்தில். டிராகனின்
கோபம் தீயை விட மூர்கமாக பாய்ந்தது. அவர்களின்
கூட கோபுரங்களை சாய்த்தது. வீடுகளை மாய்த்தது.

இரவு நிலவின் கீழே எரிந்தது மலை. தங்கள்
அழிவின் காலடி ஓசை கேட்டது கற்குள்ளர்களுக்கு.
தங்கள் வராண்டாக்களை விட்டு ஓடினர். டிராகனின்
காலால் மிதிபட்டு மாண்டனர், அந்த நிலவொளியின்
ஜாமத்தில்.

வெகு தூரத்தில், வெண்பனி படர்ந்த மூடுபனிமலையில்,
அதன் குளிரில், மலையின் அடியில், அதி ஆழத்தில்,
பாதாள அறைகளும், புராதன குகைகளும் இருக்கு,
பொழுது சாய்வதற்குள், போக வேண்டும் நாங்கள்,
யாழ்களையும், தங்கத்தையும், டிராகனிடம் இருந்து
மீட்க!“

அவர்கள் பாடப் பாட, கையினாலும், தந்திரத்தாலும், மந்திரத்தாலும், செய்யப்படும் அந்த பொக்கிஷங்களின் மேல் ஒரு பிரியம் வந்து, எல்லரின் நெஞ்சுக்குள்ளே ஊடுருவியது. கட்டுக்கடங்காத பொறாமை கிளப்பும் அந்த ஆசை, கற்குள்ளர்களின் மனங்களிலே உருகும் அந்த ஆசை, பில்போவை பிடித்துக்கொண்டது. ஏதோ ஒரு ‘டூக்’ பரம்பரை குணம் அவரின் உள்ளே விழித்துக்கொண்டது. அந்த பிரம்மாண்ட மலைகளையும், காற்றில் சலசலக்கும் பைன் மரங்களையும், நீர் வீழ்ச்சிகளையும், மலைக்குகைகளையும் போய்ப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. கைத்தடிக்கு பதிலாக, உடைவாள் அணிந்து போக வேண்டும் போல் இருந்தது. ஜன்னலின் வழியே வெளியே பார்த்தார். மரங்களுக்கு மேலே அந்த இருண்ட வானத்தில், நட்சத்திரங்கள் மினுமினுத்தன. அது ஏனோ அவருக்கு இருண்ட குகையில் மின்னும் கற்குள்ளர்களின் புதையலை ஞாபகப்படுத்தியது. திடீரென்று, நீராற்றைத் தாண்டி இருந்த காட்டிலிருந்து தீச்சுவாலை ஒன்று கிளம்பியது—யாரோ குளிர் காய மரக்கட்டைகளை கொளுத்துகிறார்கள் போல—ஆனால், சூறையாடும் டிராகன்கள் வந்து அமைதியான இந்த குன்றில் உட்கார்ந்துகொண்டு தீமூட்டுவது போல் தோன்றியது அவருக்கு. அவர் உடல் நடுங்கியது. ஆனால், திடீரென்று, குன்றின் அடியில், பாகின்ஸ் தெருக்கோடியில் வாழும், வெறும் மிஸ்டர் பாகின்ஸ்’ஆக மறுபடியும் மாறிவிட்டார்!

அவர் எழுந்து நின்றார். உடல் லேசாக உதறியது. (ஒரு மனது)விளக்கை எடுத்துக்கொண்டு, (இன்னொரு மனது)இல்லை எடுக்கிற மாதிரி பாவனை செய்துவிட்டு, ஓடிப்போய், ஊக்கபானக் கிடங்கில், பீர் பேரள்கள் பின்னால் ஒளிந்து கொண்டு, எல்லா கற்குள்ளர்களும் வீட்டை விட்டு போன பிறகு தான் வெளியே வரவேண்டும் என்று தோன்றியது அவருக்கு. திடீரென்று, இசையும், பாட்டும் நின்று விட்டது என்று அவருக்கு உரைத்தது. எல்லாரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருண்ட அந்த அறையில் அவர்கள் அனைவரின் கண்களும் ஜோளித்தன பில்போவைப் பார்த்து.

எல்லரின் ஓடி ஒளியும் திட்டத்தை தெரிந்து கொண்டு விட்டதைப் போல, “எங்கே போகிறீர்கள்?” என்றார் தோரின்.

“இருட்டா இருக்கே. விளக்கு ஏத்தலாம்னு” என்றார் பில்போ பாவமாக.

“எங்களுக்கு இருட்டு பிடிக்கும்.” என்றனர் குள்ளர்கள். “இரகசியம் பேச இருட்டு தான் சௌகர்யம்! விளக்கு தேவையில்லை. அவசரமும் இல்லை. விடிவதற்க்கு இன்னும் பல மணி நேரம் இருக்கு.”

“சரி சரி!” என்று சொல்லிவிட்டு, வேகமாக உட்கார்ந்த பில்போ, ஸ்டூலில் உட்காருவதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த நெருப்புத்தொட்டியின் மேல் உட்கார்ந்து, தீயை கிளற வைத்திருந்த கம்பியையும், கரியை வாரி நெருப்பில் கொட்ட வைத்திருந்த மண்வெட்டியையும் தட்டி விட்டு விட்டார். அவை தடாலென்று கீழே விழுந்தன.

“ஷ்..ஷ்..ஷ்!” என்றார் காண்டாளர். “தோரினை கொஞ்சம் பேச விடுங்கள்!”. தோரின் பின் வருமாறு பேச ஆரம்பித்தார்.
“காண்டாளரே, குள்ளர்களே மற்றும் மிஸ்டர் பாகின்ஸ்! இப்பொழுது நாம் நமது நண்பனுமான, கூட்டாளியுமான, பில்போவின் வீட்டில் இருக்கிறோம். இந்த அற்புதமான, கர்வமான எல்லர்—அவர் கால் விரல் முடி எப்போதும் கொட்டாமல் இருக்க வாழ்த்துவோம்—அவருடைய திராட்சை மது ரசத்திற்கும், பார்லி மதுக்கஷாயத்திற்கும், நன்றி! நன்றி!-” கொஞ்ச நேரம் நிறுத்தி, மூச்சு வாங்கிக்கொண்டார். அத்தோடு, சம்பிரதாயமாக, பில்போ சில வார்த்தைகள் பேசவும் நேரம் கொடுத்தார். ஆனால் இந்த புகழ்ச்சி எல்லாம் பில்போவின் தலை மேல் ஏறி ஓடிவிட்டன. அவர் இப்போது, தலையை வேகமாக ஆட்டி ஆட்டி மறுப்பு தெரிவித்துக்கொண்டிருந்தார். தன்னை கர்வமானவன் என்று சொல்லிவிட்டாரே! அதுவும் இல்லாமல், கூட்டாளி என்று கூப்பிடுகிறாரே, என்று தடுமாறிய பில்போவின் வாயிலிருந்து பேச்சே வரவில்லை. அதனால், தோரின் தனது பேச்சை தொடர்ந்தார்.

“நாம் இப்போது, நமது திட்டங்களையும், வழிகளையும், வசதிகளையும், கொள்கைகளையும், கருவிகளையும் பற்றி பேச கூடி இருக்கிறோம். நாம், சீக்கிரம், பொழுது விடிவதற்குள், நமது நீண்ட பயணத்தை ஆரம்பிக்க போகிறோம். இந்த பயணத்தில் இருந்து, நம்மில் சிலர், அல்லது நாம் அனைவரும்(நம் ஆலோசகர், நண்பர், சூட்சமமான மந்திரவாதி காண்டாளரைத் தவிர) நிரந்தரமாகத் திரும்பி வராமல் போகலாம். இது நாம் அனைவரும் மனப்பூர்வமாக முடிவு எடுக்கப்போகும் நேரம். நம் பயணத்தின் நோக்கம் நம் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். கண்யவான் மிஸ்டர் பாகின்ஸ் அவர்களின் நன்மைக்காகவும், நம்மிடையே உள்ள ஒன்றிரண்டு இளம் கற்குள்ளர்கள்(குறிப்பாக, கிளி, பிளி) இவர்களின் நன்மைக்காகவும், இந்த தருணத்தில் நமது திட்டத்தைப் பற்றி சுருக்கமாக விளக்க வேண்டியிருக்கிறது—”

இப்படி பேசுவது தான் தோரினின் பழக்கம். இவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கற்குள்ளர். இவரை விட்டால், இப்படியே, மூச்சு வாங்கும் வரை, ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்த விஷயத்தையே பேசிக்கொண்டே போவார். ஆனால் அவர் பேச்சுக்கு, அவமரியாதையாக இடர்பாடு வந்தது. இதற்க்கு மேலும் பில்போவால் தாங்க முடியவில்லை. அவர் உள்ளே இருந்து ஒரு ஓலம் கிளம்பியது. வெகு விரைவில், அது சுரங்கத்திலிருந்து வெளிவரும் ரயில் என்ஜின் கூவல் போல வெடித்துக்கொண்டு வெளியே வந்தது. எல்லா குள்ளர்களும் அதிர்ச்சியில் தடால் என்று எழுந்ததில், மேஜை குப்புற விழுந்தது. காண்டாளர் தன் மந்திர பிரம்பின் நுனியில் நீல நிற தீபம் உண்டாக்கி அந்த சிறு எல்லரின் அருகே வெளிச்சம் காட்டினார். பில்போ, தரையில் கம்பளத்தின் மேலே குனிந்து மண்டியிட்டு, சூட்டில் உருகும் மெழுகு போல நடுங்கிக்கொண்டிருந்தார். பிறகு குப்புற தரையில் விழுந்து “இடி விழுந்து விட்டது! இடி விழுந்து விட்டது!” என்று பிதற்ற ஆரம்பித்துவிட்டார் நிற்காமல். வெகு நேரத்திற்கு அவர் வாயில் வேறெதுவும் வரவைக்க முடியவில்லை. அதனால், அவரைத் தூக்கிக் கொண்டு போய் அப்பாலிருந்த சோபாவில் கிடத்தி விட்டு, அவர் கைக்கருகே கொஞ்சம் தண்ணீரையும் வைத்துவிட்டு, தங்களுடைய திட்டங்களைத் தீட்ட மீண்டும் வந்தார்கள்.

“கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டார், நம் சிறு எல்லர்.” என்றார் காண்டாளர். “அவ்வப்பொழுது ஒரு நூதன வலிப்பு வந்து விடும், ஆனால் மிகவும் திறமைசாலி. திறமையென்றால் திறமை, நெருக்கடியில் மாட்டிக்கொண்ட நெருப்பு கக்கும் டிராகனை போன்ற திறமை.”

நெருக்கடியில் மாட்டிய டிராகனை நீங்கள் நேரே பார்த்திருந்தால், மேலே சொன்னது ஒரு உதாரணத்துக்கு சொன்ன பொய் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு எல்லனின் திறமையை வர்ணிக்க, இப்படி சொல்லலாம். ஏன், காளை-கர்ஜிப்பி என்று அழைக்கப்பட்ட டூக் தாத்தா மிகப் பிரம்மாண்ட(மற்ற எல்லர்களுடன் ஒப்பிடும்போது) உடல் வாகு கொண்டிருந்ததால், குதிரை சவாரி செய்ய முடிந்த அவருக்கு கூட மேலே சொன்னது பொருந்தாது. அவர் கிராம் மலையில் நடந்த வயல்காட்டுப் போரில் கோபுளின் படையை எதிர்த்து வெகுண்டு போரிட்டார். அவர் மரக்கட்டையால் அடித்ததால் கோபுளின் ராஜா தலை அறுந்து விசிறி எறியப்பட்டது. அந்த தலை வானத்தில் பறந்து, நூறு காத தூரம் தாண்டிப் போய், ஒரு முயல் வலைக்குள்ளே விழுந்தது. இப்படியாக, அந்த போரில் வெற்றி எய்தார்கள்; அத்தோடு, குழிப்பந்தாட்டம்(golf) என்ற விளையாட்டும் உருவானது.

இதே சமயத்தில், காளை-கர்ஜிப்பியின் சந்ததியில் வந்த கனிவான ஒருவர், பக்கத்து அறையில், சுய நினைவுக்கு வந்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நடுக்கத்துடன், வரவேற்பறையின் கதவருகே வந்தார். அப்போது, கிளாயின் பேசிக்கொண்டிருப்பது அவருக்கு கேட்டது. “அவர் செய்வார் என்று நினைக்கிறீர்களா? இந்த எல்லரின் வீர தீரங்களைப் பற்றி காண்டாளர் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முக்கியமான நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, இப்படியொரு ஓலமிட்டால், அந்த டிராகன் மட்டுமல்ல, அதன் சொந்தக்கார டிராகன்களும் விழித்து விடும், பிறகு நம்மை எல்லோரையும், கூண்டோடு கைலாசம் அனுப்பிவிடும். அது என்னவோ உணர்ச்சி வசப்படுவது போல் இல்லை. திகில் பயத்தில் இட்ட ஓலம் போல் இருந்தது. சொல்லப்போனால், இந்த வீட்டின் கதவில் குறியிடவில்லை என்றால், கண்டிப்பாகத் தவறான வீட்டிற்கு வந்து விட்டேன் என்று திரும்பிப் போயிருப்பேன். இந்த சிறு எல்லர், மிதியடியில் இங்கும் அங்கும் ஓடி அலறியதைப் பார்த்த உடனே எனக்கு சந்தேகம் வந்து விட்டது. இவரை கடைக்காரன் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால், கொள்ளைக்காரன் என்று ஒருப்போதும் சொல்ல முடியாது!”

மிஸ்டர் பாகின்ஸ், கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். அவரின் டூக் குடும்ப குணம் வென்று விட்டது. வீர தீர பில்போவாக மாற அவர் எதையும் இழக்கத் தயாராகிவிட்டார். சிறு எல்லன் தரையில் அங்கும் இங்கும் ஓடினானா? இப்படி அவரைப்பற்றி பேசியது, அவருக்கு பெரும் ஆக்ரோஷத்தை உண்டுபண்ணியது. இப்பொழுது அவர் செய்ததை நினைத்து, அவரின் பாகின்ஸ் குடும்ப மனம் பல முறை நொந்துகொண்டது பின்னாளில். “பில்போ, நீ ஒரு முட்டாள்! சும்மா இருக்காமல், தானாகப் போய் தலையை விட்டாயே!” என்று.

இப்போ...

“மன்னிக்கவும்,” என்றார் பில்போ. “நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். நீங்கள் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று எனக்கு முழுவதுமாக புரியவில்லை. ஆனால் நீங்கள் கொள்ளைக்காரன் என்று பேசியதைப்பற்றி, நான் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். (அவர் தன்னை ரோஷக்காரன் என்று சொல்லிக்கொண்டது இதற்க்கு தான்). நான் எதற்கும் லாயக்கு இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்களுக்கு தெளிவாக சொல்கிறேன் கேளுங்கள். என் வீட்டுக்கதவில் எந்த வித அடையாளக்குறியும் இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பு தான் வர்ணம் பூசினேன் அந்தக்கதவில். நீங்கள் கண்டிப்பாக தவறான வீட்டிற்கு தான் வந்திருக்கிறீர்கள். உங்க கேலிக்கூத்தான முகங்களை ஏன் வீட்டு வாசற்படியில் பார்த்த உடனேயே எனக்கு சந்தேகம் வந்து விட்டது. ஆனால், சரியான வீட்டிற்கு வந்ததாக ஒரு மரியாதைக்காகவாவது நினைத்துக்கொள்ளலாம் இல்லையா? நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், முயற்சி செய்கிறேன். இங்கிருந்து நடந்தே சென்று, கிழக்கு திசையின் கிழக்கிற்கே போகவேண்டுமானாலும் சரி, அங்கே போய் டிராகனாக மாறும் மனிதனுடன், கடைசி பாலைவனத்தில் சண்டையிட வேண்டுமானாலும் சரி, முயற்சிக்கிறேன். என்னுடைய, கொள்ளுக்கு கொள்ளு தாத்தா, காளை-கர்ஜிப்பி ஒருமுறை - ”

“ஒ போதும் போதும், அதெல்லாம் பழங்கதை.” என்றான் கிளாயின். “நான் உங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நான் கட்டாயம் சொல்கிறேன், இந்த வீட்டுக்கதவில், அடையாளக்குறி இருந்தது--அதுவும் வழக்கமாக தொழிலில் இருக்கும் கொள்ளைக்காரர்கள் போடும் அடையாளம். இன்னும் இது பழக்கத்தில் இருக்கிறதோ என்னவோ, ஆனால் இதைக் கைதேர்ந்த திருடர்கள் பயன்படுத்துவது உண்டு. <திறமையான திருடனுக்கு ஒரு நல்ல வேலை தேவை. சுவாரசியமான வேலை. வேலைக்கேற்ற கூலி வேண்டும்> இது தான் அந்த அடையாளத்திற்கு அர்த்தம். திருடன் இல்லை ஆனால், புதையல் தேடலில், சாமர்த்தியசாலி என்று நீங்கள் சொல்லலாம். சில திருடர்கள் இப்படிக் கூட செய்வார்கள். எங்களைப் பொறுத்த வரையில், திருடனும் ஒன்று தான், புதையல் தேடுபவனும் ஒன்று தான். இந்த பகுதியில், அப்படிப்பட்ட ஒரு திருடன் இருப்பதாகவும், அவன் வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும், இன்று புதன் கிழமை, தேநீர் அருந்தும் வேளையில், அவனை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், காண்டாளர் தான் கூறியிருந்தார்.”

“கண்டிப்பா அடையாளக்குறி இருக்கு.” என்றார் காண்டாளர். “போட்டதே நான் தான். அதுக்கு ஒரு நல்ல காரணமும் இருக்கு. உங்கள் பயணத்திற்கு, பதினான்காவதாக ஒரு ஆள் தேவை என்று என்னிடம் கேட்டிருந்தீர்கள். ஆகவே, நான் மிஸ்டர் பாகின்ஸை தேர்ந்தெடுத்தேன். நான் தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து விட்டேன் என்றோ, அல்லது தவறான வீட்டைத் தேர்ந்தெடுத்து விட்டேன் என்றோ யாராவது இங்கு சொல்லத்துணிந்தால், அப்படியே பதிமூன்று பேரோட நிறுத்திக்கொண்டு நடையைக்கட்டுங்கள், உங்களுக்கு வேண்டிய எல்லா துருதிஷ்டங்களையும் அடையுங்கள், அதன் பிறகு மறுபடியும் போய் நிலக்கரி தோண்டுங்கள்.”

அவர் கோபத்தோடு எரிந்து விழுந்ததைப் பார்த்த கற்குள்ளன் கிளாயின், தன்னுடைய நாற்காலியிலேயே ஒடுங்கி விட்டான். பில்போ ஏதோ கேட்க வாயெடுத்த போது, திரும்பி அவரைப் பார்த்து முகத்தை சுளித்து, அடர்ந்த தன் புருவத்தை உயர்த்தி, பில்போ சடக்கென்று தன் வாயை மூடும் வரை அவரையே முறைத்துப் பார்த்தார். “அவ்வளவு தான்” என்றார் காண்டாளர். “இதற்கு மேல் இந்த விஷயத்தை பேச வேண்டாம். நான் மிஸ்டர் பாகின்ஸை நியமித்திருக்கிறேன். அவரே போதும், உங்கள் எல்லாருக்கும் அவரே போதும். நான் அவரை திருடன் என்று சொன்னால் அவர் திருடன், இல்லையென்றால், நேரம் வரும்போது அவர் திருடனாக மாறிவிடுவார். நீங்கள் அனைவரும், நினைப்பதை விட, அவரிடம் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஏன் அவருக்கே தெரியாத பல விஷயங்கள் அவரிடம் இருக்கின்றன. எனக்கு ஒரு நாள் நீங்கள் இதற்காக நன்றி சொல்வீர்கள், அது வரை உயிரோடு இருந்தால். பில்போ, குழந்தாய், அந்த விளக்கை எடு, இதை கொஞ்சம் வெளிச்சத்தில் வைத்து பார்ப்போம்!”

பெரிய விளக்கின் கீழே, மேஜை மீது, சிவப்பு நிறத்தில், வரைபடக் காகிதம் ஒன்றை பிரித்து வைத்தார். குள்ளர்கள் அனைவரும், என்ன ஏது என்று கேட்கவே, “இது, திரார் உருவாக்கிய, தோரின், உங்களுடைய தாத்தா உருவாக்கிய, அந்த மலையின் கட்டுமான வரைபடம்.” என்று பதிலளித்தார் காண்டாளர்.

அதை ஒரு முறை பார்த்து விட்டு, “இதனால் நமக்கு அதிக பயன் ஏதும் இல்லையே” என்றார் தோரின். “அந்த மலையும், அதைச் சுற்றி உள்ள நிலங்களைப் பற்றியும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அத்தோடு, மிருக்கு-காடு எங்கிருக்கிறது என்றும், டிராகன்கள் பெருகிக்கிடக்கும் வதங்கு-புதர்க்காடு எங்கே இருக்கிறதென்றும் தெரியும் எனக்கு.“

“அங்கே சிவப்பு நிறத்தில் மலை மீது ஒரு டிராகன் குறியிடப்பட்டுள்ளதே” என்றான் பாளின் “நாம் அங்கே போனாலே, இந்த டிராகன் இருப்பது மிகத் தெளிவாகத் தெரியுமே? இதற்க்கு எதற்கு ஒரு குறிப்பு?”

“ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்க மறந்து விட்டாய்” என்றார் மந்திரவாதி. “அங்கே ஒரு ரகசியக்கதவு, மேற்கு புறம் உள்ள மந்திர வாசகத்தினால் குறியிடப்பட்டுள்ளதே. மற்ற மந்திர குறியீடுகளில் இருந்து கூட ‘கை’ அடையாளம் போடப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பாருங்கள். அந்த வாசல் தான், அதல பாதாள வராண்டாக்களுக்கு செல்லும் ரகசிய பாதையாகும்.”

“அது முன்னொரு காலத்தில் இரகசியப் பாதையாக இருந்திருக்கலாம்.” என்றார் தோரின். “ஆனால், இப்பவும் அது ரகசியமாகத்தான் இருக்கிறது என்பதற்கு என்ன உறுதி? பல ஆண்டுகளாக அந்த குகைகளில் வாழ்ந்து வரும் வயதான அந்த சுமாகு இந்நேரம் அதை கண்டுபிடித்திருக்காதா?”

“கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், அந்த வாசலை அது இது வரைக்கும் பயன்படுத்தி இருக்க முடியாது.”

“ஏன்?”

“ஏனென்றால் அது மிகவும், குறுகிய வாசல். ஐந்து அடி உயரம் தான் இருக்கும், ஒரே சமயத்தில் மூன்று பேர் மட்டுமே அதன் வழியாக நடந்து செல்ல முடியும். அந்த சந்தில் சுமாகுவால் போக முடியாது. ஏன், சின்ன வயதாக அந்த டிராகன் இருக்கும்போது கூட, அத்தனை பள்ளத்தாக்கு நகர் கற்குள்ளர்களையும், வீரர்களையும், விழுங்கி வயிறு பெருத்த அந்த டிராகனால் அதன் உள்ளே கண்டிப்பாக போக முடியாது.”

டிராகன்களையே பார்த்திராத, எல்லன் குழிகளை மட்டுமே பார்த்து பழக்கப்பட்டிருந்த பில்போ, “எனக்கு என்னவோ மிகப் பெரிய பொந்து போல தான் தோனுகிறது.” என்று கீச்சுக்குரலில் பேசினார். மீண்டும், அவருக்கு ஆர்வம் அதிகமாகி, உணர்ச்சிவசப்பட்டு, தாம் வாயைப் பொத்திக்கொண்டிருந்தோம் என்ற விஷயத்தையே அவர் மறந்து விட்டார். அவருக்கு, வரைபடங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தமது வரவேற்பறையில் கூட, உள்ளூர் வரைபடம் ஒன்று பெரிதாக தொங்கியது. அதில், அவருக்குப் பிடித்த பாதைகளை எல்லாம் சிவப்பு வண்ணத்தில் குறியிட்டுக் காட்டியிருந்தார். “எப்படி அவ்வளவு பெரிய கதவு, வெளியில் உள்ள யாருக்கும் தெரியாமல் இருக்கும்?” இவர் மிகவும் சிறிய ஒரு எல்லன் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

“ஒரு கதவை மறைக்க பல வழிகள் இருக்கின்றன.” என்றார் காண்டாளர். “ஆனால் இந்தக் கதவு எப்படி மறைக்கப்பட்டிருக்கிறது என்பது, போய்ப் பார்த்தால் தான் தெரியும். இந்த வரைபடத்தில் இருந்து எனக்கு என்ன தெரிகிறது என்றால், இந்தக் கதவு மூடியிருக்கும் போது, பார்ப்பதற்கு ஒரு மலைப்பாறை போல் தோன்றும், சொல்லப்போனால், இப்படித்தான் கற்குள்ளர்கள், ரகசியக் கதவுகளைச் செய்வார்கள், இல்லையா?”

“நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்” என்றார் தோரின்.

“மேலும்,” தொடர்ந்தார் காண்டாளர். “ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இந்த வரைபடத்தோடு, ஒரு சிறிய நூதன சாவியும் செய்யப்பட்டது. இதோ இது தான் அது!” என்று சொல்லி, ஒரு சாவியைக் கொடுத்தார் தோரினிடம். நீண்ட சிறு குழலுடன், பலவித நுண்ணிய கதுப்புகள் செதுக்கிய அந்தச் சாவி, வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. “சாவி பத்திரம்!”

“கண்டிப்பாக,” என்று சொல்லி தோரின், தன்னுடைய மேலங்கியின் உள்ளே அவர் கழுத்தில் தொங்கிய சங்கிலியில் மாட்டித் தொங்கவிட்டார். “இது ஒரு நம்பிக்கையை கூட்டக்கூடிய நல்ல செய்தி. இது வரைக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்றே தெரியாமல் இருந்தது. கிழக்கை நோக்கி, சத்தம் போடாமல் பெரிய ஏரி வரை போகலாம் என்றும், அதற்குப் பிறகு தான் பிரச்சினை என்றும் நினைத்துக்கொண்டிருந்தோம்.”

“அதுக்கு முன்னாடி, கிழக்கில் ஏதாவது இடர்பாடு இருக்கிறதா?” என்று குறுக்கிட்டார் காண்டாளர்.

“அதற்குப் பிறகு, நாம் விரைவாறு கரையோரமாக மேலே செல்ல வேண்டும்” என்று தொடர்ந்தார் தோரின், காண்டாளரைக் கண்டு கொள்ளாமல். “பிறகு, பள்ளத்தாக்கு-நகரின் இடிபாடு வழியாக, மலையடிவாரம் வழியாக செல்ல வேண்டும். ஆனால் கோட்டையின் முன் வாசல் வழியாக போவதற்கு நம் யாருக்கும் விருப்பமில்லை. பிறகு, அந்த ஆறு, வெளிக்கிளம்பி, மலையின் தெற்குப்பகுதி வெட்டுப் பாறை வழியாக வெளியே ஓடுகிறது. அது வழியாகத்தான் அந்த டிராகனும் அடிக்கடி வெளியே வரும். இன்னும் அது தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன்.”

“அது கண்டிப்பாக நல்லதில்லை.” என்றார் மந்திரவாதி. “ஒரு மாபெரும் போர் வீரனோ, அல்லது ஒரு அசகாய சூரனோ நம்மிடம் இருந்தால், இந்த திட்டம் பலிக்கும். நானும் தேடிப்பார்த்தேன். ஆனால் சூரர்கள் எல்லாம், கண் கானா தேசத்தில் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டு பகுதியில் அசகாய சூர வீரர்கள் யாரும் இல்லை. சொல்ல வேண்டும் என்றால், இனிமேல் தான் ஒருவனை உருவாக்க வேண்டும். அத்தோடு, இந்த ஊரில் இருக்கும் போர் வாள்கள் எல்லாம் மழுங்கிப் போய் கிடக்கின்றன, கோடாலிகள் எல்லாம் மரம் வெட்ட போய் விட்டன, கவசங்களை எல்லாம் குழந்தைகளைப் போட்டு தாலாட்டவும், சாப்பாட்டுக் குண்டான்களை மூடவும் தான் பயன்படுத்துகிறார்கள். டிராகன்கள் எல்லாம் தூர நாட்டில் சந்தோஷமாக இருக்கின்றன. அதனால், அவைகள் எல்லாம் பழங்கதைகளாகப் போய்விட்டன. அதனால் தான் சொல்கிறேன், சண்டை போடுவதை விட, திருடுவது சுலபம். நல்லவேளை, ஒரு பக்கவாட்டுக் கதவு இருப்பது எனக்கு நினைவு வந்தது. இதோ நம்முடைய, குள்ள பில்போ பாகின்ஸ் தான் அந்த நிர்ணயிக்கப்பட்ட திருடன். இப்போது நாம் சில திட்டங்களை தீட்டுவோம்.”

“அப்படி சொல்கிறீர்களா? சரி ஆகட்டும்.” என்றார் தோரின். “நம் கைதேர்ந்த திருடன், ஏதாவது, ஆலோசனை சொல்லுவாரா?” என்று மிகுந்த மரியாதையுடன் கேட்பது போல, பாசாங்கு செய்தார் பில்போவை நோக்கி.

“முதலில் சில விவரங்களை கூறினால் நன்றாக இருக்கும்.” என்றார் பில்போ லேசான நடுக்கத்துடன். சற்று குழம்பி இருந்தாலும், போகிற போக்கில் போகத் துணிந்துவிட்டார். “இந்த தங்கம், டிராகன் பற்றியும், எப்படி இவை அங்கே போனது, யாருக்கு சொந்தம், இன்னும் கொஞ்சம் விவரம் சொல்ல முடியுமா?”

“கிழிந்தது!” என்றார் தோரின். “உங்களிடம் ஒரு வரைபடம் இருக்கிறது அல்லவா? அத்தோடு, இதுவரை நாங்கள் பாடிய பாட்டை கேட்கவில்லையா? மணிக்கணக்காய் இதைப்பற்றி தானே பேசிக்கொண்டிருந்தோம்?”

“என்ன இருந்தாலும், கொஞ்சம் நேராக சொன்னால் நன்றாக இருக்கும்.” என்றார் ஒட்டாரமாய், தன்னிடம் கடன் வாங்க வருபவர்களிடம் பேசுவதை போல கறாராய். அத்தோடு, அறிவுக்கூர்மையுடனும், விவேகமாகவும், தொழில் நுட்பம் தெரிந்தது போலவும், காண்டாளரின் சிபாரிசுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தோன்ற வேண்டும் என்றும் முயற்சி செய்தார். “அதே போல, இதில் என்ன அபாயம் இருக்கிறது, எனக்கு எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு நாளாகும், என்ன சம்பளம், இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லுங்கள்.” அதாவது, அவர் உண்மையிலேயே என்ன கேட்டார் என்றால் “இதனால் எனக்கென்ன லாபம்? நான் உயிரோடு திரும்பி வருவேனா?”

“சரி சரி” என்றார் தோரின். “பலப்பல வருடங்களுக்கு முன்னாள், என் தாத்தா திரார் அவர்களின் காலத்தில், தூர வடக்குப் பகுதியில் இருந்து என்னுடைய குடும்பமே துரத்தியடிக்கப்பட்டது. பிறகு, தங்கள் புதையல்கள் மற்றும் வேலைப்பாட்டுக் கருவிகளுடன், இதோ இந்த வரைபடத்தில் இருக்கும் இந்த மலைக்கு வந்து சேர்ந்தார்கள். இந்த மலை, எங்கள் முன்னோர்களில் ஒருவரான, திராயின் என்பவரால் முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்பொழுது தான் இந்த மலையைக் குடைந்து, சுரங்கப்பாதைகள் பல அமைத்து, பெரிய பெரிய மண்டபங்கள் அமைத்து, பிரம்மாண்ட தொழிற்சாலைகளை அமைத்தார்கள்- அத்தோடு, ஏகப்பட்ட தங்கங்களையும், விலையுயர்ந்த கற்களையும், வைர வைடூர்யங்களையும், கண்டெடுத்தார்கள். இதனால், அவர்கள் செல்வங்கள் கூடின, புகழ் பரவியது, என்னுடைய, தாத்தா, மறுபடியும் ராஜாவகினார் அந்த மலையின் பாதாளத்திற்கு. மலையின் தெற்கு பகுதியில் வாழ்ந்த மனிதர்களும் அவரைப் போற்றி மதித்தனர். கூடிய விரைவில், அது விரைவாறு வரை பரவியது. மலையடிவாரத்தில் பறந்து விரிந்த கிடந்த பள்ளத்தாக்கு முழுவதும் பரவியது. பள்ளத்தாக்கில், களிக்கொண்டாட்டங்களுக்காக பள்ளத்தாக்கு-நகரையும் கட்டினார்கள். பல நாட்டு அரசர்கள், எங்கள் கொல்லர்கள் உதவி கேட்டு செய்தி அனுப்பினார்கள். மிகவும் குறைந்த திறமை கொண்ட கொல்லர்களுக்கு கூட கோடி கோடியாய் பரிசு கொடுத்தார்கள். பல தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளை எடுபிடி வேலைக்கு சேர்த்துக்கொண்டு தொழில் கற்றுக்கொடுக்குமாறு எங்களிடம் வேண்டுவார்கள். அதற்காக நிறைய உணவுப்பொருட்கள் வேறு கொட்டிக்கொடுப்பார்கள் எங்களுக்கு. அதனால், நாங்கள் உணவுக்கு விவசாயம் கூட செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அது ஒரு அருமையான காலம். எங்களில் மிகுந்த ஏழைகள் கூட, செலவு செய்யவும், வட்டிக்கு விடவும், பணம் வைத்திருந்தார்கள். அழகான பொருட்களை ஆசைப்பட்டு செய்ய நிறைய ஓய்வு நேரமும் இருந்தது, மிகவும் அற்புதமான, விந்தையான மந்திர பொம்மைகள் பல செய்தோம். அந்த மாதிரி பொருட்களை இப்போது கண்ணால் கூட எங்கும் காண முடியாது. என்னுடைய தாத்தாவின் மண்டபங்களில், கவசங்களும், நகைகளும், கைவினைப்பொருட்களும், கோப்பைகளும் நிரம்பி வழிந்தன. பள்ளத்தாக்கு நகரின் பொம்மை சந்தை, வடக்குப் பிரதேசம் எங்கும் வியந்து போற்றப்பட்டது.”

“இந்த புகழ் தான், அந்த டிராகனையும் அங்கே கொண்டு வந்தது. டிராகன்கள் வழக்கமாக, தங்கத்தையும், நகைகளையும், மனிதர்களிடமிருந்தும், கற்குள்ளர்களிடமிருந்தும், வேண்தேவர்களிடமிருந்தும் திருடும் குணாதிசயம் கொண்டவை. எங்கு புதையல் கிடைத்தாலும், அவை அதை கொள்ளையடித்து, அவை சாகும் வரை(டிராகன்கள் கொல்லப்பட்டாலொழிய, அவை சாகவே சாகாது) பாதுகாக்கும். ஆனால் ஒரு குண்டு மணியைக் கூட அவை செலவு செய்து மகிழாது. சொல்லப்போனால், கைதேர்ந்த வேலைப்பாட்டை தரம் பிரிக்கத் தெரியாது அவைகளுக்கு. ஆனால், சந்தையில், எது எவ்வளவு விலை போகும் என்று ஏறக்குறைய அவைகளுக்குத் தெரியும். ஒரு நகை கூட செய்யத் தெரியாது. அவைகளின் பாதுகாப்பு கவசத்தில் ஒரு உலோகத் தட்டு தளர்ந்தாலும் அதை சரி செய்யத் தெரியாது. அப்போது, வடக்கில், ஏகப்பட்ட டிராகன்கள் இருந்தன. அதனால் அவற்றிற்கு தங்கம் கிடைப்பது அரிதாக இருந்தது போல. கற்குள்ளர்கள், தெற்கு நோக்கி பிழைப்பு தேடினர். டிராகன்களின் அட்டுழியம் மோசமான நிலையை அடைந்தது. அதிலே, மிகவும் பேராசை கொண்ட, சக்திவாய்ந்த, வக்கிர புத்தி கொண்ட சுமாகு என்ற அற்ப புழு ஒன்று இருந்தது. ஒரு நாள், அது வானத்திலே பறந்து, தெற்கு நோக்கி வந்தது. முதலில் ஏதோ வடக்கிலிருந்து சூறாவளி புயல் வருகிறது என்று நாங்கள் நினைத்தோம். மலையின் மேலே இருந்த பைன் மரங்கள் பேயாட்டம் ஆடி காற்றில் முறிந்தன. மலையைத் தாண்டி வெளியே சென்றிருந்த கற்குள்ளர்கள் சிலர் (அதிஷ்ட வசமாக, சாகசபயணம் செல்வதில் பேர் வாங்கிய இளம் காளையாக திரிந்து கொண்டிருந்த நான், தொடரும்.....)”